10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்

     இவரை கருமசௌமியர் என்பவரின் சீடர் என்றும் அகத்தியரின் சீடர் என்றும் கூறுவர். இவர் முற்பிறவியில் இராமதேவர், மறுபிறப்பில் தேரையர் ஆவார்.

     அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர்.

      அதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப் பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.

     பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார். சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.

     சீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை “அடுப்பைப் பார்த்துக்கொள்” என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார்.

     கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் இராமதேவன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.

     அகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார்.

     குறிப்பறிந்து செயல்பட்ட இராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.

     காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்கமுடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தன்னை குணப்படுத்துமாறு கதறினான். அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். மன்னனின் தலைவலிக்கான காரணம் புரிந்தது. “மன்னா! நீ தூங்கும்போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. அந்த தேரை மூளைக்குப் போய் தங்கிவிட்டது. அந்த தேரைதான் உன் தலைவலிக்குக் காரணம்” என்றார். மன்னன் திடுக்கிட்டான். அகத்தியர் மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன் என்று தைரியம் கூறினார்.

     சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது. இதைக் கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பைக் கண்ட இராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தான்.

     தேரை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தினுள் குதித்தது.

  உடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் கபாலத்தை மூடினார். சீடரைக் கட்டித்தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும் பாராட்டினார்.

     இராமதேவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார்.

  அவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அவரின் உறுதுணையால் தேரையர் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலை இயற்றி ‘தொல்காப்பியர்’ என்ற பெயரும் பெற்றார்.

     ஒருமுறை சித்தர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அவர் தனது நோயைத் தீர்த்துக்கொள்ள அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியரும் அவருக்கு மருந்தை தந்து பத்தியத்தையும் கூறி அனுப்பினார்.

  ஆனால் நோய் குணமாகவில்லை. அகத்தியர் தகவல் அறிந்து உடனே தேரையரை அழைத்து அவர் நோயைக் குணப்படுத்துமாறு அனுப்பினார். சித்தரைப் பரிசோதித்த தேரையர், ஒரு கொடுக்காய்க் குச்சியை எடுத்து நோயாளியின் வாயை திறந்து குச்சியை அதனுள் நுழைத்து அதன் ஓட்டை வழியாக மருந்தை செலுத்தினார். வயிற்று வலி உடனே தீர்ந்தது. தேரையர் அகத்தியரிடம் சென்று செய்தியைக் கூறினார்.

     தாம் கொடுத்த மருந்து பலம் இழந்ததற்கு காரணம் நோயாளியின் பல்லில் உள்ள விஷத்தன்மைதான் என்பதை உணர்ந்து தேரையர் குச்சி மூலம் மருந்தை செலுத்தியுள்ளார் என்பதை அகத்தியர் உணர்ந்துகொண்டார்.

     தேரையரின் திறமையை வெளிப்படுத்த நினைத்த அகத்தியர் அவரை அருகில் அழைத்து தேரையா! நீ உனக்கு விருப்பமான இடத்திற்கு போய் நல்லவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி செய் என்றார்.

 தேரையரும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்யும் முனி, ரிஷிகளின் பிணிகளைப் போக்கினார்.

உலக நன்மையின் பொருட்டு...
பதார்த்த குண சிந்தாமணி,
நீர்க்குறிநூல்,
நோய்க்குறி நூல்,
தைல வர்க்க சுருக்கம்,
வைத்திய மகா வெண்பா,
மணி வெண்பா,
மருந்துப் பாதம்

முதலான நூல்களை இயற்றினார்.

அகத்தியருக்கு நாளுக்கு நாள் கண்பார்வை மங்கியது. சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அப்போது அணனமயம் காட்டில் இருக்கும் சித்தர் பற்றி நினைவு வரவே அவரை அழைத்து வந்து அகத்தியர் கண்ணுக்கு வைத்தியம் செய்ய எண்ணி அகத்தியரிடம் உத்தரவு வேண்டினர். அகத்தியர் கொஞ்சம் யோசித்து “நீங்கள் போகும் போது புளியமரத்தின் நிழலிலேயே உறங்க வேண்டும்” என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

     வெகுநாட்கள் நடந்த சீடர்கள் தேரையரின் இருப்பிடத்தினை அடைந்தனர். தன் குரு நாதருக்கு கண் பார்வையைத் தெளிவாக்க வேண்டுமாறு கோரினர். இதைக் கூறி முடித்த சீடர்கள் இரத்தவாந்தி எடுத்தனர். அந்த நிலைக்கான காரணத்தை அறிந்திருந்த தேரையர், சீடர்களிடம் திரும்பிச் செல்லும் போது வேப்பமரத்தின் நிழலிலேயே உறங்கிச் செல்லுமாறும் தாம் இரண்டு நாட்களில் வைத்தியத்திற்கு வருவதாகவும் கூறியனுப்பினார்.

      திரும்ப வந்த சீடர்கள் உடல் நலனுடன் இருப்பதைக் கண்ட அகத்தியர் “இது தேரையரின் வைத்தியம் தான்” என்பதை புரிந்து கொண்டார்.

    தேரையர் அகத்தியரின் ஆசிரமம் அடைந்து அகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார். பார்வை தெளிவடைந்த அகத்தியர், சடாமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை இங்கு வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களில் விழுந்து வணங்கினார். நாட்கள் ஓடின.

      ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்.

ஸ்ரீ தேரையர் தியான செய்யுள்

மாய மயக்கம் நீக்கி
காய கல்பம் தேடி
மூலிகை கொணர்ந்து
முதுகுகூன் நிமிர்த்திய
அகத்தியர் சீடரே உன் பாதம் சரணம்.

தேரையர் பூசை முறைகள்

      அகப்புறத்தூய்மையுடன் அழகிய சிறு பலகையை செம்மண்ணினால் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள் குங்குமம் இடவேண்டும். அவ்வாசனத்தின் மேல் தேரையரின் படம் வைத்து வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும்.

     முதலில் தியானச் செய்யுளை கூறி மூலிகை இலைகளினால் அர்ச்சனை செய்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூற வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. குரு மெச்சிய சீடரே போற்றி!
2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி!
3. சிவனை பூசிப்பவரே போற்றி!
4. சங்கடங்களை போக்குபவரே போற்றி!
5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி!
6. சாந்த சொரூபரே போற்றி!
7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி!
8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி!
9. சித்த சுத்தியுடையவரே போற்றி!
10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி!
11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி!
12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
13. துக்கத்தைப் போக்குபவரே போற்றி!
14. கண் ஒளி தந்த கருணையே போற்றி!
15. குறை தீர்க்கும் நிறையே போற்றி!
16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!

     அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும். நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும். இவரை பூசிக்க ஞாயிற்றுக் கிழமை சிறந்தது.

தேரையர் பூசா பலன்கள்
1. ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.
2. குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
3. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும்.
4. பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தீரும்.
5. தீராத தலைவலி, இடுப்புவலி நீங்கி நலம் உண்டாகும்.
6. உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய் சரியாகும்.
7. வீண் பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும்.
8. வாக்கு பலிதமும், ராசியோகமும் உண்டாகும்.
9. எந்த பிரச்சனையானாலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.

தேரையர் வரலாறு முற்றிற்று.

1 comment:

  1. வாழ்க வளமுடன்
    நான் உங்களுடைய பதிவுகளை பார்த்தேன் , மிகவும் அருமை , இது என்னுடைய blog gurublack.wordpress.com , ஆன்மிகம் தொடர்பாகத்தான் , பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள் . என்னுடைய ப்ளோகில் தேவைபட்டால் உங்களுடய்
    ப்லோக்க்கிற்கு லிங்க் கொடுக்கவும் , உங்களுடைய அனுமதி தேவை.

    உங்களுடைய பணி சிறக்க
    எல்லாம்வல்ல இறை ஆற்றலை பிரார்த்திக்கிறேன்.
    நன்றி
    பிரபாகரன் .

    ReplyDelete