உனக்குள் இருக்கிறது உன்னதம்-5



நான் சொல்வது உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். தமிழ்நாட்டில் ஒருவிதமான வாஸ்து இருக்கிறது. கர்நாடகத்திற்குச் சென்றால் அங்கு வேறுவிதமான வாஸ்து வழக்கில் இருக்கிறது. கர்நாடகாவிலும் கூட மலைப் பகுதிகளில் இன்னொரு விதமான வாஸ்து பின்பற்றப்படுகிறது. மலைப்பகுதிகளில் வேறுவிதமாகவும், சமப்பகுதிகளில் வேறுவிதமாகவும் வாஸ்து இருக்கிறது. வாள்து என்றால் என்ன? பழங்காலங்களில் கிராமங்களில் கட்டிடக்கலை நிபுணர்கள் யாரும் இல்லை. உதாரணத்திற்கு, ஒரு மனிதர் தன் வீட்டை தானே கட்டிக்கொள்கிறார். அவர் ஐந்து அடி உயரத்திலும், ஐந்து அடி அகலத்திலும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்கிறார். கதவு ஒரு மூலையில் இருக்கிறது. ஜன்னல் வைக்க மறந்துவிட்டார். இப்படிப்பட்ட ஒரு வீட்டில் இருந்தால் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் என்ன ஆகும்? சீரழிந்து போய்விடும் இல்லையா? இந்தக் கட்டுமான அமைப்பில் இந்தச் சுவர்களுக்கு இடையில் இருந்து கொண்டிருந்தால், நிச்சயமாக உடலும் மனமும் சீர்கெடும். எனவே, அடிப்படை வழிகாட்டுதல்களுக்காக சாஸ்திரத்தை வடிவமைத்தார்கள்.

சாஸ்திரம் என்ற சொல்லிற்கு ‘வழிகாட்டுதல்’ என்று பொருள். ஒரு வீடு கட்டுவதாக இருந்தால் அந்தப் பகுதியின் சீதோஷணத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட விதத்தில் கட்டிடம் அமைய வேண்டும். மேற்கில் மறைகிற சூரியக்கதிர்கள் அங்கே வலிமையாக விழுமேயானால், மேற்குப்பகுதியில் இருக்கிற சுவர் தடித்த சுவராக இருக்க வேண்டும். அதன் இன்னொரு பக்கம் கொஞ்சம் மெல்லிய சுவராகக்கூட இருக்கலாம். இதை ஓரளவிற்கு மக்கள் பின்பற்றினார்கள். நல்ல பலன் கிடைத்தது. எனவே, போதிய காற்றோட்டத்தோடு வீடு கட்டுவதற்கான கட்டிடக்கலை ஆலோசனைகள்தான் வாஸ்து என்பது. கிராமங்களில் கட்டிடக்கலை நிபுணர்கள் இல்லாததால் சில அடிப்படை விதிகள் வகுக்கப்பட்டன. அவற்றின்படி வீடுகள் கட்டினால் அங்கு வாழ்வதற்கு நன்றாக இருக்கும் என்பதற்காக.

இந்தியாவிலேயே பலவிதமான வாஸ்துகள் உள்ளன. அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற வாஸ்து முறைகள். கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் அதற்கு மக்கள் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார்கள். அதற்கு முன்பு இந்த நிலை இல்லை. இப்போது அது ஒரு பெரிய வணிகம் ஆகிவிட்டது. வாஸ்து உங்களுடைய வாழ்க்கைக்குள் வ்ருவதற்கு காரணம், எப்போதுமே நீங்கள் அம்சத்தில் வாழ்வதுதான். ஒரு சமையல் அறை இருக்க வேண்டிய இடத்தில் கழிவறையையும்,  கழிவறை இருக்க வேண்டிய இடத்தில் சமையல் அறையையும் கட்டியிருக்கிறீர்கள். அந்த அளவிற்கு இது போயிருக்கிறது. இப்போது என்ன கேள்விப்படுகிறேன் என்றால், நிறைய பேர் அவர்களின் கழிவறைகளில் இருக்கிற தண்ணீர்த் தொட்டியின் திசையைக்கூட மாற்றி வைக்கிறார்கள். ஏனென்றால், வாஸ்து சொல்கிறது – குறிப்பிட்ட திசையில் அமர்ந்து கொண்டு மலங்கழித்தால் நல்லது என்று! இதைவிடவும் கொடுமை இருக்க முடியுமா என்ன?

நான் முதன்முதலாக கோவைக்கு வந்தபோது, ஒரு வீட்டிற்கு என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்கள். அது ஒரு பெரிய வீடு. வீட்டிற்கிள்ளேயே ஒரு சிறிய தோட்டம் இருந்தது. மிக அழகான வீடு. ஆனால் அந்தத் தோட்டத்தின் மையப்பகுதியில் ஒரு பெரிய கொடிக்கம்பம் இருந்தது. எந்த ஒரு காரணத்திற்காகவும் இல்லாமல் அது வெறுமனே அங்கு நின்று கொண்டிருந்தது. அங்கிருந்த பெண்மணியைப் பார்த்து “இந்தக் கொடிக்கம்பம் எதற்காக?” என்று கேட்டேன். அவர் என்னிடம் சொல்லத் தயங்கினார். என்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன ஆகும் என்று அவருக்குத் தெரியும். எனவே, “நான் ஈஷா யோகா வகுப்பிற்கு முன்பே வந்திருந்தால் இதைச் செய்திருக்க மாட்டேன்” என்று சொன்னார். “ஏன்? என்னாயிற்று?” என்று கேட்டேன். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு எந்த வீட்டைக் கட்டியதாகவும், அங்கு பல ஆண்டுகள் அவர்கள் நன்கு வாழ்ந்து வந்ததாகவும் சொன்னார். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு ஒரு வாஸ்து விஞ்ஞானி வந்தார். இயற்கையில் இல்லவேயில்லாத ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பவர்கள் தான் பெரிய விஞ்ஞானிகள்.

இந்த வாஸ்து விஞ்ஞானி வந்து பார்த்துவிட்டு, ‘இந்த வீட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வீட்டின் தென்மேற்கு மூலை, அந்த வீட்டை விடக் கொஞ்சம் உயரமாக இருக்கவேண்டும். ஆனால் உங்கள் வீட்டின் வடமேற்கு மூலைதான் கொஞ்சம் உயரமாக இருக்கிறது. இது இப்படியிருந்தால் உங்கள் மகன் இறந்துவிடுவான்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பெண்மணிக்கு இரண்டு மகன்கள். இதைச் சொல்லிவிட்டு அந்த விஞ்ஞானி போய்விட்டார். இப்பொழுது இந்தப் பெண்மணி பதறிப் போய்விட்டார். அவரது கணவர் ஒரு மருத்துவர். அவர் இதை ஏற்கவில்லை. அவருக்கு வீட்டை இடித்துக் கட்டுவதில் விருப்பமில்லை.

அந்த விஞ்ஞானி செய்துவிட்டுப் போன இந்த மனக்குழப்பம் இந்த வீட்டில் ஒரு வாரம் நீடித்திருக்கும் வரை பொறுத்திருந்தார். இந்த வாரத்திற்குள் பல்வேறு உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு ஏறக்குறைய பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு இந்தப் பெண்மணி போய்விட்டார். தன் மகன்கள் தெருவோரத் திருப்பங்களில் இறந்துவிழுவது போல் கனவு வரத்தொடங்கியது. அவர் மனதில் ஏகப்பட்ட கற்பனைகள் தொடங்கின. மிகவும் பயந்து போய்விட்டார். தன் மகன்கள் எப்போதும் இறக்க நேரிடும் என்ற அச்சம் நீடித்தது. எனவே ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த விஞ்ஞானியை மறுபடியும் அழைத்தார். அந்த வாஸ்து விஞ்ஞானிக்கும் இது தெரியும் – அவர் சொல்லிவிட்டுப் போய் எத்தனை நாட்களுக்குள் இந்த எதிர்விளைவு ஏற்படும் என்று. ஒரு வாரத்திற்குள் அந்த வாஸ்து விஞ்ஞானியே தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அந்தத் தீமையை எதிர்கொள்வதற்கு ஏதாவது செய்யுமாறு அவரை இவர் கேட்டுக்கொண்டார்.

அந்த மனிதர் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது என்று சொல்லி 20,000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, அவர்கள் மகன் சாகாமல் இருப்பதற்காக ஒரு 25 அடி உயர கொடிக்கம்பத்தை வீட்டிற்குக் கொண்டுவந்தார். அந்த வீட்டில் இருப்போர் உதவியோடு மிகவும் சிரமப்பட்டு அந்தக்கொடிக்கம்பம் வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டதுபோல நடித்தால் தானே இந்த நாடகம் உச்சகட்டத்தை அடையும். அந்தக் கொடிக்கம்பத்தைக் கொண்டு வந்து வைத்து விட்டார்கள்.

இப்போது இந்தக் கொடிக்கம்பம் வந்ததால் அதன் மேற்கு மூலை உயரமாகி அவர்கள் மகனின் உயிரை இவர் காப்பாற்றிவிட்டார்.

நிச்சயமாக வீடு கட்டுவதற்கு என்று ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. அதில் உடல்நலம், உள்ளநலம் என்று நல்வாழ்க்கைக்கு உதவி செய்வதற்கென்று அம்சங்கள் உள்ளன. இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அச்சத்தின் காரணமாக அதற்கு அளவி கடந்த முக்கியத்துவத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள். வாஸ்து ஒரு விஞ்ஞானம் தான்.. நான் மறுக்கவில்லை. இப்பொழுது அது முழுமையாகக் கைவிடப்பட்டிருக்கிறது. அதற்கு மாற்றாக சீனாவில் இன்னொன்று வந்திருக்கின்றது. இனி உங்கள் கழிப்பறையை நீங்கள் சமையலறையாக மாற்ற வேண்டியதில்லை. கழிப்பறையின் முன்னால் ஒரு கண்ணாடி வைத்துவிட்டால் போதும். கழிப்பறையிலேயே உங்கள் சமையலறை தெரியும். இதைச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். இவர்கள் என்னும் அறிவாளிகளாக இருக்கிறார்கள். எதையும் இடிக்க வேண்டாம். வெறும் கண்ணாடிகளும், கற்களுமே எல்லாவற்றையும் சரி செய்து தருகிறது. எது செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்வதில்லை. தேவையில்லாத விஷயங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள். உங்கள் எல்லா சக்தியையும் இதுபோன்ற செயல்களில் நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

No comments:

Post a Comment