7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்

இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.

ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார்.

போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா! என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும் என்ற நூலில் காணப்படுகிறது.

சட்டைமுனி இயற்றிய நூல்கள்:

சட்டைமுனி நிகண்டு – 1200

சட்டைமுனி வாதகாவியம் – 1000

சட்டைமுனி சரக்குவைப்பு – 500

சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500

சட்டைமுனி வாகடம் – 200

சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200

சட்டைமுனி கற்பம் – 100

சட்டைமுனி உண்மை விளக்கம் – 51

தியானச் செய்யுள்

சித்த வேட்கை கொண்டு

சிறந்து விளங்கிய சீலரே

அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற

அற்புத மூர்த்தியே

எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்

ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!

சட்டைமுனி சுவாமி பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி!

2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி!

3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி!

4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி!

5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி!

6. வருண பகவானை வணங்குபவரே போற்றி!

7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி!

8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி!

9. கவலைகளை அகற்றுபவரே போற்றி!

10. நோய்களை அழிப்பவரே போற்றி!

11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி!

12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி!

13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி!

14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!

15. ராமநாமப் பிரியரே போற்றி!

16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி! என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்:

இவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்,

1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.

2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும்.

3. சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும்.

4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும்.

5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

6. போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.

7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.

8. இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம்.

பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.

சட்டைமுனி சித்தர் வரலாறு முற்றிற்று.

No comments:

Post a Comment