உனக்குள் இருக்கிறது உன்னதம்-8



எனது செயலின் அடிப்படையான நோக்கமே – எந்த ஒரு மார்க்கத்தை மக்கள் பின்பற்றினாலும் அது அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டுக்குத்தான் என்பதை பல வழிகளில் நினைவுபடுத்துவதாகும். மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மிகமே தவிர, குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடையாளம் காண அல்ல. மனிதம் மதத்தன்மை எய்துகிறான் என்றால், அது அனைத்து மோதல்களுக்கும் ஒரு முடிவாக இருக்க வ்வேண்டும். ஆனால் சுரதிர்ஷ்டவசமாக மதங்களே இன்று அனைத்து மோதல்களுக்கு காரணமாக இருக்கிறாது. மதமே அதிகபட்ச துன்பத்தை இவ்வுலகில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகிறது. அடிப்படையில் இவற்றிற்குக் காரணம், மக்கள் தாங்கள் உண்மையென்று உணராத ஒன்றை நம்புவதுதான். சிலர் ஒன்றை நம்பி, மற்றவர்கள் வேறொன்றை நம்பத் தொடங்குகிற போது, இயல்பாகவே மோதல் எழுவதைத தவிர்க்க முடியாது. இன்றோ நாளையோ அவர்கள் மோதிக்கொள்ளத்தான் போகிறார்கள். இடையில் கொஞ்சநாள் மோதிக் கொள்வதைத் தவிர்க்கலாம். ஆனால் என்றாவது மோதிக்கொள்வார்கள். உங்கள் வழிதான் சிறந்தது என்று நீங்கள் நம்பி, தன் வழிதான் சிறந்தது என்று இன்னொருவர் நம்புகின்ற வரையில், மோதல் இருந்து கொண்டுதான் இருக்கும். எனவே அனைத்து மதங்களுமே உள்நிலை நோக்கிய பயணமாகத் தொடங்கினாலும் கூட, ஒரு எல்லைக்கு மேல் அவை திசை திரும்பி, சில ந்ம்பிக்கைகளின் தொகுப்பாகவே மாறிவிட்டன.

மனிதனின் மகத்துவம் குறித்து எல்லா மதங்களும் பேசியிருக்கின்றன. ஆனால், அதே மதத்திற்காக இன்னொரு மனிதன் உயிரை எடுக்கவும் சிலர் தயாரயிருக்கிறார்கள். நிறைய துயரங்களும், மோதல்களும் இந்த உலகத்தில் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே இந்த அடிப்படை சிக்கல், சரியான பார்வையில் பார்க்கப்படவில்லை என்பது என் கருத்து. எப்போது ஒரு குழுவிற்டும், மறு குழுவிற்கும் நடுவில் தற்காலிக உடன்பாட்டை ஏற்படுத்தத்தான் எல்லோரும் முயல்கிறார்கள். இந்த உடன்பாடு நீண்ட நாள் நீடிப்பதில்லை. எங்காவது மோதல் எழுகிறது. இந்த மோதல் எழுவதன் அடிப்படைக் காரணமே மக்களின் சில நம்பிக்கைகள் தான். தங்கள் வாழ்வில் உணராத ஒன்றை நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு மாறாக, நீங்கள் உண்மையை நோக்கி நகர்வீர்களேயானால் எல்லாருக்கும் ஒரே உண்மைதான். அது கிறிஸ்துவராகயிருந்தாலும், இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் உண்மை ஒன்றுதான். நம்பிக்கை என்று வருகிறபோது, ஒவ்வொருவரும் எது சரி, எது தவறு என்பது பற்றித் தனித்தனி நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். எது உண்மை, அது உண்மையில்லை என்பதைப் பற்றியும் தனித்தனியான ஒரு நம்பிக்கை இருக்கிறது. பார்க்காததையும், அனுபவித்து உணராததையும் நம்புகிறார்கள். எல்லா முரண்பாடுகளுக்கும் இதுதான் அடிப்படைக் காரணம்.

எனவே நமது அடிப்படையான நோக்கம், மதத்தை ஒரு உள்நிலை அனுபவமாகக் கொண்டு சேர்ப்பதே தவிர அதை ஒரு நம்பிக்கையோடும் தொடங்காதீர்கள். உள்ளே பார்க்க ஆரம்பியுங்கள். எது உண்மையோ அந்த உண்மையை அனுபவத்தால் கண்டுணர்ந்து இன்னும் ஆழமாகப்போய், அதை ஒரு நம்பிக்கையாக அணுகாமல் ஒரு அறிவியலாக அணுகத் தொடங்குங்கள். தொன்மையான மதங்கள் கூட எப்போதுமே நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது துரதிர்ஷ்ட்டமாகும். ஏறக்குறைய எல்லா மதங்களுமே பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் பக்தி என்பது அப்பாவியாக – குழந்தைத்தனமாக இருக்கிற மனிதர்களுக்குத் தான் சரி; குழந்தையைப் போன்ற ஒரு மனநிலை தேவை என்பதிஅ எல்லா மதங்களும் சொல்லியிருக்கின்றன. இயேசு, ‘இந்தப் பாதை குழந்தைகளுக்கு உண்டானது’, என்று உங்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘கடவுளின் சாம்ராஜ்யத்தை குழந்தைகள்தான் சென்றடைவார்கள்’ என்பது அவரது வாக்கு. இதன் பொருள், குழந்தை போன்ற தன்மையுடையவர்கள் தான் பக்தி என்கிற பாதையில் நடைபோட முடியும் என்பது. தர்க்க அறிவு வளரத் தொடங்குகிற போது மனிதன் சிந்திக்கத் தொடங்குகிறான். இத்தகைய மனம் பக்திப்பாதையில் நடையிடாது. இது தன்னைத்தானே பல வழிகளில் ஏமாற்றிக் கொள்ளும்.

எனவே யோகாவில், அடிப்படையில் ஒரு மனிதன் வளர்வதற்கு – தன்னுள் இருக்கிற இறைத்தன்மையை அடைவதற்கு – அதை நீங்கள் எப்படி அழைத்தாலும் சரி, அதற்கென்று நான்கு வழிகள் உள்ளன. ஒன்று உடல் வழியாக அல்லது மனம் வழியாக அல்லது உணர்வு வழியாக அல்லது உள்நிலை சக்திகளின் வழியாக. இந்த நான்கு தான் உங்களுக்குத் தெரிந்த உண்மையான தன்மைகள். மற்றவையெல்லாம் கற்பனைகள். மற்றவை அனைத்தும் இங்கு போதிக்கப் பட்டுள்ளன. உங்களுக்குத் தெரிந்த நான்கு உண்மைகள் உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்வுகள் மற்றும் இவை மூன்றையும் இயக்குகிற உங்கள் சக்திநிலை.

எனவே மனிதர்கள் வளர்வதற்கென்று இந்த நான்கு பரிமாணங்கள் உள்ளன. இந்த நான்குதான் யோகாவின் நான்கு அடிப்படை வழிகள். உள்நிலை வளர்ச்சிக்கு உடல் பயன்படுமேயானல் அது ‘கர்மயோகா’ என்றழைக்கப்படும். மனித மனம், அறிவு ஆகியவை பயன்படுமேயானால் அது ‘ஞானயோகா’ என்றழைக்கப்படும். உணர்வு, பக்தி, அன்பு ஆகியவை பயன்படுமேயானால் அது ‘பக்தியோகா’ என்றழைக்கப்படும். உங்கள் சக்தி நிலைகளை மேம்படுத்தி அதன்மூலம் வளர்வதென்றால் அது ‘கிரியா யோகா’ என்றழைக்கப்படும். எனவே இந்த நான்கு வழிகளின் மூலமாக, ஒரு மனிதன் வளர்ந்து தன் உள்நிலையை உணரலாம். அறிவு வழியாகவோ, பக்தி வழியாகவோ, பயன் கருதாத பணிகள் மூலமாகவோ, உள்நிலை சக்திகளை மாற்றியமைப்பதன் மூலமாகவோ இது சாத்தியம். இது உடல், இதயம், சக்தி என்று சொல்வது போன்றது. முழுமையாக அறிவு சார்ந்தோ, மனம் சார்ந்தோ, உழைப்பு சார்ந்தோ, சக்தி சார்ந்தோ எந்த மனிதனும் இல்லை. இந்த நான்கு பரிமாணங்களின் கலவைதான் மனிதன்.

எனவே ஒரு மனிதன் வளர வேண்டுமேயானால் நான்கு பாதைகளுக்கும் ஒரு ஒருங்கிணைந்த மார்க்கம் தேவை. அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம். அப்போதுதான் எல்லையில்லா தன்மையை அடைய வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் இங்குமங்கும் மோதிக் கொள்கிற குழுக்கள் தான் இருக்கும். ஆன்மிக நிலையில் எதுவும் நிகழ வாய்ப்பில்லை. உண்மையிலேயே ஓர் உயர்ந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டாலேயொழிய, வெளியுலகத்திற்கென்று பயன்படும்படி நீங்கள் எதையும் செய்ய இயலாது. நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் தன்மையைத்தான் நீங்கள் பரப்பப் போகிறீர்கள். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ அதுதான் உண்மை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதுதான் உங்கள் மூலம் பரப்பப்படப் போகிறது. எனவே இந்த உலகைப் பற்றிக் கவலைப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி உங்களை மாற்றிக் கொள்வது.

இந்த அடிப்படையில்தான் யோகா தொடங்குகிறது. அமைதிப் புரட்சி என்று நாங்கள் அழைப்பது இதைத்தான். இந்த அமைதிப் புரட்சி வேறொருவரை மாற்றுவது பற்றி அல்ல. எல்லா இடங்களிலும் யாருக்கோ, யாரையோ மாற்றா வேண்டுமென்றுதான் ஆசை. மாமியாருக்கு மருமகளை மாற்ற வேண்டுமென்றும், மருமகளுக்கு மாமியாரை மாற்ற வேண்டுமென்றும் ஆசை. இது காலங்காலமாக உள்ள பிரச்சனை. அதேபோல புரட்சியாளர்கள் என்று கூறப்படுவர்களும், மதவாதிகளும் மற்றவர்களை மாற்றா வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

‘அமைதிப்புரட்சி’ என்பது என்னை நானே மாற்றிக் கொள்ள விரும்புகிறேன் என்பது. உலகத்தை மாற்ற வேண்டுமென்பதல்ல. அது உங்களை நீங்களே மாற்றிக்கொள்கிற லட்சியம். நீங்கள் மாற விரும்பினால்தான் உலகத்தில் மாற்றம் என்பது சாத்தியம். நான் மற்றவர்களை மாற்றா வேண்டுமென்று நீங்கள் சொன்னால் அங்கே மோதல்தான் தொடங்கும். நீங்கள் மாறுவதாயிருந்தால் தான் மாறுதல் ஏற்படும். உண்மையான தீர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment