15. பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்

காக புசுண்ட சித்தர் ஒரு காக்கை வடிவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தார் என்பர். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திரக் குலத்தில் பிறந்தார். இவர் அறிவிற்சிறந்தவர். பெரும் தபசி. இவர் பிரளய காலங்களில் அவிட்ட நட்சத்திர பதவியில் வாழ்வார். ஆகையால் இவரை காகபுசுண்டர் என்பர்.

ஒருசமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். சிவபெருமான் தனக்கு எழுந்த சந்தேகத்தை அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். “இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா?” என்றார்.

எல்லோரும் மௌனமாக இருந்தனர். மார்க்கண்டேயர் “இதற்கு திருமாலே பதில் சொல்வார்” என்றார். திருமாலிடம் சிவன் கேட்டார். அவரும் “பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக எனது சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு வந்த புசுண்டர் எப்படியோ என் சக்கரத்தினை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைத் தாண்டிச் சென்றார். அதனால் அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அனுப்பி அவரை அழைத்து வருவதுதான் சரி, அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலும்” என்றார்.

சிவனும் வசிட்டரை அனுப்பி புசுண்டரை அழைத்து வரும்படி சொன்னார். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தினைக் கூறினார். புசுண்டரும் தான் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார்.

தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லாழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களைக் கண்டதாகவும் கூறினார்.

காக புசுண்டர் துணைகாவியத்தில் இந்நிகழ்ச்சி விளக்கமாகக் கூறப்படுகிறது.

காக புசுண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. அவைகளில் கிடைத்தவை:
1. புசுண்டர் நாடி,
2. காகபுசுண்டர் ஞானம் – 80
3. காக புசுண்டர் உபநிடதம் – 31
4. காக புசுண்டர் காவியம் – 33
5. காக புசுண்டர் குறள் – 16
இவை இவருடைய வேதாந்தக் கருத்துக்களைக் கூறுகின்றன.

காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புசுண்டர் யோகஞானம், சமாதிமுறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

“இல்லறமாயினும், துறவறமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகாவிடில் செய்யும் பிற செயல்கள் வீண் பகட்டாகக் கருதப்படும்” என்கிறார்.

காக புசுண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி கொண்டதாகவும் சித்தர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காகபுசுண்ட முனி தியானச் செய்யுள்

காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே!
யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும்
காக்கை ஸ்வாமியே!
மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே உமது
கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே!

காக புஜண்ட சித்தர் பூஜை முறைகள்
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ஸ்ரீ காக புசுண்ட சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி நீலோத்பலம், நீல சங்கு, தவனம், மரு கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. மகா ருத்ரரே போற்றி!
2. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
3. ஸ்ரீம், ஹ்ரீம், லம், நமஹ, ஸ்வம், பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
4. அசுரர்களை அழிப்பவரே போற்றி!
5. தேவர்களைக் காப்பவரே போற்றி!
6. ஸ்ரீ ராமரை பூசிப்பவரே போற்றி!
7. அன்னப்பிரியரே போற்றி!
8. மானஸா தேவியை வணங்குபவரே போற்றி!
9. சிவசக்தி ஐக்கியத்தைத் தரிசிப்பவரே போற்றி!
10. மகானுகளுக்கெல்லாம் மகானே போற்றி!
11. மனிதர்களை வணங்கும் தெய்வமே போற்றி!
12. நோய்களுக்கு மருந்தே போற்றி!
13. கோடி லிங்கங்களை பூஜிப்பவரே போற்றி!
14. பாவத்தைப் போக்குபவரே போற்றி!
15. நாரதகானப் பிரியரே போற்றி!
16. ஸ்ரீ ராமர் பாதத்தை தரிசனம் செய்த ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், லம் நமஹ, ஸ்வம் ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக வறுத்த கடலை, தண்ணீர் ஆகியவற்றை வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வணங்க வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவேண்டும்.

காகபுசுண்டர் பூசையின் காரிய சித்தி பலன்கள்
இவர் நவக்கிரகங்களில் குரு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்..
1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
2. பணப்பிரச்சினை, புத்திர பாக்கிய கோளாறு, அரசாங்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவையும் அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை ஆகியவை அகன்று லஷ்மி கடாக்ஷம் பெருகும்.
4. வயிறு, குடல் சம்பத்தப்பட்ட கோளாறுகாள் நீங்கும்.
5. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
6. வறுமை அகன்று வாழ்க்கை வளம்பெற இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் விஷேசப்பலன்கள் கிடைக்கும். இவரை வழிபட சிறந்த நாள் வியாழன்.
காகபுசுண்டர் சித்தர் வரலாறு முற்றிற்று.

No comments:

Post a Comment