16. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்பது சிலரது கருத்து. இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார்.

இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர், இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து, “மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய்?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர், அந்த சித்தரை வணங்கி, பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம், சோதிடம், ஞானம், யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இடைக்காடர் சித்தர் ஆனார். தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார்.

முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர்.

இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார்.

உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது.

மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார்.

இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.

தியானச் செய்யுள்

ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!

ஸ்ரீ இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி தென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி!
2. கருணாமூர்த்தியே போற்றி!
3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி!
4. இளநீர் பிரியரே போற்றி!
5. உலகரட்சகரே போற்றி!
6. அபயவரதம் உடையவரே போற்றி!
7. மருந்தின் உருவமானவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. ஒளிமயமானவரே போற்றி!
10. கருவை காப்பவரே போற்றி!
11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி!
13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி!
14. அங்குசத்தை உடையவரே போற்றி!
15. தேவலீலை பிரியரே போற்றி!
16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை.

இடைக்காடர் சித்தரின் காரியசித்தி பூஜா பலன்கள்
இவர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்..
1. ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் ஏற்படும்.
2. கல்வியில் தடை, சரியாக படிக்க முடியாத நிலை அகலும்.
3. வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனைகள் நீங்கி வளம் பெருகும்.
4. கற்பனைத் திறன், கவித்திறன் கூடும்.
5. அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும்.
6. புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.
7. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிட்டும்.
8. கல்விக்கூடங்களுக்கு உண்டான பிரச்சனைகள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அகலும்.
9. தோல் சம்பத்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

இடைக்காடர் சித்தரின் வரலாறு முற்றிற்று.

No comments:

Post a Comment