17. குதம்பைச் சித்தர்

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.

யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான்.

குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.

குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீ குதம்பைச் சித்தரின் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. சிவனை பூசிப்பவரே போற்றி!
2. ஹடயோகப் பிரியரே போற்றி!
3. சூலாயுதம் உடையவரே போற்றி!
4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி!
5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
6. ஜோதி சொரூபரே போற்றி!
7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி!
8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி!
9. நாட்டியப்பிரியரே போற்றி!
10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி!
11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி!
12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி!
13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி!
14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி!
15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் குதம்பைச் சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

தியானச் செய்யுள்
சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே!

குதம்பை சித்தர் பூஜா பலன்கள்
இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்..
1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.
2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும்.
3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும்.
4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும்.
5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும்.
6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.

இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம். இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை.

குதம்பைச் சித்தர் வரலாறு முற்றிற்று.

No comments:

Post a Comment