உனக்குள் இருக்கிறது உன்னதம்! - 1


****************************************************************
‘உனக்குள் இருக்கிறது உன்னதம்’ என்ற இக்கட்டுரையை சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் சொற்ப்பொழிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டதாகும். அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. எனக்கு கிடைத்த அந்த பொக்கிஷம் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் இந்த வலைப்பூவில் அரங்கேற்றுகிறேன். நன்றி. – கவிப்ரியன்.
**************************************************************** 
     ஆத்ம சாதனையில் ஒரு பிரம்மச்சாரி ஈடுபடுவதற்கும், இல்லறத்தில் இருப்பவர் ஈடுபடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லறத்தில் இருப்பவர் ஆத்ம சாதனையில் ஈடுபட பலரது அனுமதியையும் பெற வேண்டும். அவர்கள் அனுமதி தரலாம்; தராமலும் போகலாம். இல்லறத்தில் அத்தகைய சிக்கல்கள் உண்டு. ஆனால் ஒரு பிரம்மச்சாரி தானாக முடிவெடுக்கலாம். குறிப்பிட்ட சில ஆத்ம சாதனைகளை மேற்கொள்வது இல்லறவாசிகளுக்கு சிரமமாக இருக்கும். அதற்குத் தேவையான சூழலை உருவாக்க முடியாது. அப்படியானால் உண்மையை உணர்ந்திட எல்லோருமே பிரம்மச்சாரியாக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அப்படியொன்றும் அவசியமில்லை. உள்நிலையிலிருக்கும் உண்மையை உணர்வதற்கு வெளிச்சூழல் எப்படியிருந்தால் என்ன? நமக்கு எப்படித் தேவையோ அதற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.

     சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் பிரம்மச்சாரியம் மேற்கொள்கிறார்கள். இரண்டில் எது சரி, அது தவறு? அல்லது இரண்டில் எது சிறந்தது? இப்ல்படி எதுவுமேயில்லை. ஒவ்வொருவருமே தங்கள் தனிமனிதத் தேவைகளுக்கு ஏற்ப வாழ்கிறார்கள். சிலருக்குத் திருமணம் தேவையில்லை. எனவே பிரம்மச்சரியம் மேற்கொள்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே விதிகள் இருப்பது சாத்தியமில்லை. திருமணம் தேவைப்படுபவர்களுக்குப் பிரம்மச்சரியம் தரப்பட்டால் அவருக்கு அது நரகம். திருமணம் வேண்டாதா ஒருவர் திருமண பந்தத்திற்குள் திணிக்கப்பட்டால் அவருக்கு அது வேறுவிதமான நரகம். அவருக்கு மட்டுமன்றி அவருடன் திருமண பந்தத்தில் இணைபவருக்கும் அது ஒரு நரகமாகத்தானிருக்கும்.

     பலரும் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். செம்மறி ஆடுகள் போல் வாழ்ந்திருக்கிறார்கள். தங்களுக்குத் திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை.  எல்லோருக்கும் திருமணமானதால் இவர்களும் திருமணம் செய்துகொண்டார்கள். அதற்கான தேவையிருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திக்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த ப்ந்தம் அவருக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடுகிறது. திருமணத்தோடு சேர்ந்து வரும் மற்ற பொறுப்புகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. திருமணம் என்றால் வாழ்க்கை முறையிலேயே நிறைய மாற்றங்கள். இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கும், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் முழுமையாகத் தயார் செய்துகொண்ட பிறகுதான் திருமணபந்தத்திற்குள் ஒருவர் நுழைய வேண்டும் அல்லவா? அது ஒரு நாளில் முடிந்துவிடுகிற விஷயமல்ல; அத்தோடு சேர்த்து பல விஷயங்கள் உள்ளன.

     நீங்கள் என்ன செயல் செய்தாலும், அதன் தொடர்ச்சியாக நிறைய விளவுகள் இருக்கும். உள்ளபடியே நீங்கள் அறிவாளியாயிருந்தால், அந்தச் செயல்களுக்கான விளைவுகளுக்கு நீங்கள் தயாரா என்று ப்லார்த்து, அது உங்களுக்குத் தேவையா? இல்லையா? என்று முடிவு செய்வீர்கள். விளைவுகளைச் சந்திக்க நீங்கள் தயார் என்று முடிவெடுத்து, அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். இதை சிந்தித்துதான் நீங்கள் முடிவவ செய்ய வேண்டும். எல்லோருக்கும் பொதுவான ஒன்றை நீங்கள் உங்களுக்காக  நிர்ணயிக்க முடியாது.

     ஒரு தம்பதியின் 25-வது திருமண நாளில் நடந்தது இது. மணவாழ்க்கை எந்த நிலையிலிருந்தாலும் திருமணநாளைக் கொண்டாடியே தீரவேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகள் எப்படியிருந்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் திருமண நாளைக் கொண்டாடிவிட வேண்டும் இல்லையா? இந்த மனிதர் அழுது கொண்டிருந்தார். மனைவி சொன்னாள்:- "நம்ப முடியவில்லையே! நம் திருமணம் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்களே" என்று. கணவர் சொன்னார்:-" இல்லை ... உன் அப்பா ஒரு நீதிபதி. நான் உன்னுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் என்மீது ஏதாவது வழக்குப் போட்டு 25 ஆண்டுகள் சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், எனக்கு இன்றோடு விடுதலை கிடைத்திருக்கும். சுதந்திர மனிதனாக இருந்திருப்பேன்" என்றார்.

     எங்கோ தவறு நடந்து எல்லாம் துயராயம் ஆகிவிடுகிறது. அதற்காக திருமணமே தவறு என்று பொருளல்ல. அது இரண்டுபேர் ஒருவிதமான பகிர்தலோடு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. அது வாழ்வதற்கான ஒரு நல்ல வழி. அதன்மூலம் அற்புதமான ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் போதிய மனமுதிர்ச்சியில்லாதவர்கள் அளவுக்கதிகமான பற்றுதலை வளர்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ள முனைந்தால திருமணம் தோல்வியடையும். நீதிமன்றம் வரை போகாவிட்டாலும, தனி வாழ்க்கையிலாவது தோல்வியிருக்கும்.

     நீங்கள் எதுவுமே அறியாத முட்டாளாக இருந்தால் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் முழுமையாகச் சரணடைந்திருந்தாலும் சிக்கலில்லை. அல்லது இருவருக்குள் எது நடந்தாலும் அதை அற்புதமாக உணருமளவுக்கு மிகுந்த அன்புடன் வாழ்ந்தாலும் சரி; இல்லையென்றால் திருமண வாழ்க்கை சாத்தியமேயில்லை. சமூகப் பொறுப்புகள் கருதி இரண்டுபேர் ஒட்டுதல் இல்லாமல் ஒன்றாக வாழ்வது பைத்தியகாரத்தனம். அவர்கள் ஒருவர் வாழ்வை ஒருவர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

     ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். இளமையில் அவர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் கதையே வேறு. கல்லூரிகளில் கூட பார்த்திருக்கிறேன். இந்தக் காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் பிறந்ததுபோல் எண்ணுகிறார்கள். பெரும் எதிர்ப்ல்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்ய்து கொள்ளுகிறார்கள். பெற்றோரை எதிர்த்து சமூகத்தை எதிர்த்து திருமணம் நடந்தேருகிறது. உற்சாகமும், உயிரோட்டமுமாய் இருந்த இவர்கள் திருமணமாகி ஐந்தாறு வருடங்களிலேயே துன்ப்ல்லமயமாகி விடுகிறார்கள். அவர்கள் முகத்தில் சோகம் கவிழ்ந்திருக்கிறது. உயிரோட்டம் காணாமல் போய் விடுகிறது. இத்தகையவர்களைப் பார்ப்பதே துயரமானது. அந்த உறவை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, அதை மூலதனமாகப் பார்க்கத் தொடங்கும்போதே வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடுகிறது.

     யாரையாவது நீங்கள் நேசித்தால் அதை ஒரு முதலீடாக மாற்ற நினைக்கிறீர்கள் இல்லையா? ஏன்? அதிலிருந்து அனைத்து விதமான பாதுகாப்புகளையும் பெறமுடியும். ஆனால், அந்த உறவின் சாரம் அத்தோடு முடிந்துவிடுகிறது. அந்த் நேசத்தைப் பயன்படுத்தி, எதையாவது பெற முயற்சி செய்தீர்களேயானால், அங்கே நநசம் அழிந்துவிடும். பெற்றுக்கொள்கிற விஷயம் மட்டுமே இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இதை செய்ய எல்லோருமே முயற்சிக்கிறார்கள். அதற்கென ஒரு பெரிய விலை கொடுக்க நேர்ந்தாலும் யாரும் அதுபற்றிப் புரிந்துகொள்வதில்லை. அப்படட கொடுக்கக்கூடிய பெரிய விலை உங்கள் வருத்தமும் துயரமும் தான். இதனால் உங்களது நேசத்தை இழக்கிறீர்கள். அதிலிருக்கிற ஆனந்தத்தையே இழக்கிறீர்கள். நேசத்தையே இழந்தபிறகு வேறு என்ன விலை கொடுக்க முடியும். இதைவிட நரகம் உண்டா என்ன? குறைந்தது கல்லூரிக் காலங்களில் ஏற்பட்ட காதல் அனுபவங்களை நினவுகூர்ந்தால் அது ஆனந்தத்திற்கு ஒரு மூலமாக இருந்திருக்கும் இல்லையா? ஆனால் உங்கள் கனவுகள் நனவானபோது அதை வியாபாரமாக்க முயற்சித்தீர்கள். உங்கள் வாழ்விலே ஒரு அற்புதமான மனிதர் என்று நினைத்தவர் மிக மோசமான மனிதராக ஆகிவிட்டால்? இப்படி நிகழ்வ்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் தலைமுறை தலைமுறையாக இது இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது.

     இதுதான் மாறுவதற்கான நேரம். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள உங்களுக்கு இது வேண்டும், அது வேண்டாம் என்பதை நீங்கள் தீர்க்கமாக முடிவு செய்ய இதுதான் உகந்த நேரம்.

No comments: