24 தத்துவங்கள்

பிரகிருதியிலிருந்து அஹம்காரம், அதிலிருந்து மகத் என்கிற புத்தி, பிறகு மனம் உண்டாகின்றன. மனத்திலிருந்து ஐந்து தன்மாத்திரைகள் என்ற சூக்ஷ்ம பூதங்கள், ஐந்து ஸ்தூல பூதங்கள், அவைகளினால் ஐம்புலன்களும் இவற்றின் வெளித் தொடர்புக்கென ஐம்பொறிகளும் பிறக்கின்றன.
சம்சாரம் அல்லது சம்பந்தப்பட்ட வாழ்க்கை இப்படிப் பிரிந்த பிரகிருதியால் புருஷனுக்கு சுக துக்க வாழ்க்கையாக உலகில் வாய்க்கிறது.

இதைத் தொலைக்கும் வழி
1. உலகில் துன்பம் உள்ளது
2. துன்பத்திற்கான காரணம் உள்ளது.
3. இந்தத் துன்பத்தை போக்க முடியும்.
4. அதற்கான வழி இருக்கின்றது.
ஆரம்பத்திலிருந்து, சம்சாரம் எப்படி ஏற்பட்டதோ அதே வழியில் திரும்பிச் சென்று தன்னறிவு பெறுவது தான் அது. ஏறக்குறைய எல்லா மதங்களுமே, உண்மையையோ, கடவுளையோ தேடித் திரும்பிச் செல்வது தான்.
அதன்படி, பொறிகளை, புலன்களை, இயம நியமங்களால் அடக்கி, ஆசன, பிராணாயாமத்தால் உடலை நேர் செய்து, மனத்தை பிரத்யாஹாரத்தால் விஷயங்களிலிருந்து மீட்டு, ஒன்றில் குவித்து, அதையே தியானமாக்கி, சமாதியடைந்து, பிரகிருதியில் பிரதிபலிக்கும் புருஷனைத் தனியாக அறிந்து, விருத்திகளைப் பூரணமாக ஒடுக்கி, ஐந்தாவது மன நிலையான நிருத்தத்தை அடைந்து, ராக த்வேஷம் முதலிய வாசனைகளை ஒழித்து, வழியில் கிட்டும் அற்புத ஆற்றல்களையும் மதியாமல் பேரமைதியைப் பெற வேண்டும். இதை சாதிக்க, தத்வக்யானம் என்ற விவேகக்யாதிக்காக, அப்யாசம், வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால் பறக்க வேண்டும். இதற்கு அடிப்படை புருஷனின் சொந்த முயற்சி, செய்யும்போது, ஈஸ்வரனைப் பணிந்து யோகம் பழக வேண்டும். இது உபாயம் அல்லது சாதனமாகும்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3

இந்த விஞ்ஞான்னிகளின் கண்டுபிடிப்பானது பௌதிகப் பொருள்காளுக்கெதிரான எதிரணுக்களைக் கண்டறிந்த போதும், வேறுவிதமான ஒரு ஜடசக்தியைக் காணும்வரை சென்று நின்றுவிடுகிறதே ஒழிய, ஜடமல்லாத, பௌதிகத் தத்துவமேயல்லாதவற்றைக் காணவில்லை. ஜடப்பொருளானது இயல்பாகவே, அழியக்கூடிய தன்மையை கொண்டதாகும். ஜடத்தன்மையின் லட்சணங்க்கள் சிறிதுமற்ற பொருள், அழியும் தன்மையுமற்றதாக, இயற்கையிலேயே அமையவேண்டுமல்லவா?
ஜடமானது அழியக்கூடியதும், பிரிவுபடக்கூடியதுமாக இருக்க வேண்டும். நம்பகமான சாத்திரங்களின் பார்வையில் இந்த 'சேதன' தத்துவங்களைக் காண்போம்:-
இவ்வுலகின் மிகவும் அங்கீகாரமான நூற்கள் வேதங்களாகும். வேதங்கள் 4 பிரிவுகளை உடையன. ரிக், யஜுர், சாம, அதர்வ என்பன அப்பிரிவுகள். சாதாரண அறிவுகொண்டவர் புத்திக்கெட்டாத விஷயங்கள் இவ்வேதங்களில் அடங்கியுள்ளன. தெளிவாக விளக்கும் பொருட்டு வேதங்கள், மகாபாரதம் போன்ற காவியத்திலும், பதினெண் புராணங்களிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இராமாயணமும் வேதங்களின் கருத்தை விளக்கும் ஒரு காவியமே. நான்கு வேதங்கள், வால்மீகியின் மூலராமாயணம், மகாபாரதம், புராணங்கள்- இவை வேதபுத்தகங்களாகும். உபநிஷதங்களும் வேத நூல்களின் பகுதியாகக் கருதப்படுகின்றன. வேதாந்த (சூத்திரங்கள்) வேதங்களின் சாரமாகும். இந்த வேத நூற்களையெல்லாம் சுருக்கித் தந்தாற்போன்ற பகவத் கீதை, உபநிஷதங்களின் கருத்துரையும், வேதாந்த சூத்திரங்களின் சுருக்கமான பொருளுரையும் போன்றது. வேதங்களின் முடிவான தத்துவங்களை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கீதையைப் புரிந்து கொள்வது அவசியம். ஆன்மிக உலகிலிருந்து இறங்கிவந்து, பௌதிககத்திற்கப்பாற்பட்ட, தன் உன்னதமான சக்தியைப்பற்றி முழுவிவரம் கொடுப்பத்ற்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் உபதேசம் செய்யப்பட்டதால் கீதை வேத நூற்களெல்லாவற்றின் மணிமுடியாகத் திகழ்கின்றது.
பரம புருஷனின் உன்னதமான சக்தியை 'பராப்ரக்ருதி' என்று கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அழிவுக்குட்பட்ட ஜடப்பொருள்களில் இருவகை உண்டென்றுதான் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் கீதையோ, ஜடம், சேதனம் என்பவற்றை இருவகைச் சக்திகளாகப் பிரித்து விவரிக்கின்றது. பொருளென்பது ஜடநிலையில் பௌதிக உலகை உருவமைக்கின்றது, தனது உன்னத நிலையில் சேதன உலகை உருவாக்குகின்றது.
உயிர்கள் உயர்சக்தியைச் சேர்ந்தவை. கீழ்ச்சக்தியான பௌதிக சக்தி, 'அபராசக்தி' என்றழைக்கப்படுகின்றது. பகவத்கீதை இவ்விதமாக 'பரா', அபரா' என்று சிருஷ்டி சக்தியை இருவிதமாக விளக்குகிறது.
-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-----

யோக நிலைகள்

யோக நிலையை அடைய, சமாதி நிலையை அடைய, 8 அங்கங்களான,
இயம,
நியம,
ஆசன,
பிராணாயாம,
பிரத்தியாகார,
தாரண,
தியான,
சமாதி
எனப்படும் 8 படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும். நன்றாக செப்பனிடப்பட்ட ராஜ பாட்டை போல நிச்சயமான வெற்றியைத் தர வழிகளை உடையதாக இருப்பதால் 'ராஜயோகம்' என்றும் இதற்குப் பெயருண்டு.
இதை பஹிர்முகம், அந்தர்முகம் என இரண்டாகப் பிரித்து சொல்லுவர். பஹிர்முகமாவது வெளி நோக்கிய உடலாலியற்றப்படும் ஆசனம், பிராணாயாமம், இயமம், நியமம் முதலியன. சிலர் இதில் பிரத்யாஹாரத்தையும் சேர்ப்பர்.
அந்தர்முகமாவது, பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதியாகும்; இவை மனத்தால் இயற்றப்படுபவையாகும்.
பஹிர்முகமான யோகப் படிகளை மட்டும் ஹடயோகம், கிரியாயோகம் என்றும் சொல்லுவதுண்டு.
கிரியா யோகாவில், முத்திரைகள், பந்தங்களுடன் குண்டலினிச் சக்தியைக் கிளப்பி 'வர்ண மாலாக்கள்' எனப்படும் அட்சர ஜபத்தால் செய்யப்படுவதை 'குண்டலினி யோகம்' என்பார்கள்.
தந்திர யோகம் எனப்படுவதிலும் முக்கியமாக ஆசனம், பிராணாயமம், யோக ஆதாரங்கள் முதலியவைகளை பிற சடங்குகளுடன் வைத்துக் கொண்டுள்ளனர்.
கரும யோகமானாலும், பக்தி யோகமானாலும், ஞான யோகமானாலும், ராஜ யோகம் எனப்படும் இந்த அஷ்டாங்க யோகத்தில் கூறப்பட்டுள்ளவை வேறு வேறு விதமாய் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதால் இதன் சிறப்பு விளங்கும்.
மேலும் சாங்கிய மதத்தில் இறுதி நிலையை அடைய கூறப்பட்ட வழிகளும் யோக வழியும் ஒன்றே! ஆனால், 'தத்துவம்' என்று நோக்கும் போது சாங்கியத்தையே யோகம் எதிர்பார்த்து நிற்கிறது. வேதாந்த மதங்களும் கூடத்தான்.
சுருக்கமாக கூறவேண்டுமானால், சாங்கியமும், யோகமும் ஒன்றே; யோகத்தில் "புருஷ விசேஷஹா" என்று ஈஸ்வரன் கூறப்படாமலிருந்தால்!

யோகம் - என்றால் என்ன?

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.
இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான 'சித்தி'களும் ஏற்படுவதால், உலகில், நல்ல அதிர்ஷ்டக்காரர்களை 'யோகக்காரர்கள்' என்றும், நினைத்தது கைகூடும் வேளையில், 'அவனுக்கு யோகமடிக்கிறது' என்றும் கூறுவது வழக்காயிற்று.
இந்த சாத்திரத்தில், முதல்படியாக ஒழுக்கமும் ஆச்சார அனுஷ்டானங்களும் விதிக்கப்பட்டிருப்பதால் நல்லவனை, உலகில் 'யோக்கியன்' என்று கூறுவது மரபாயிற்று.

மதங்கள் அவசியமா?

'மதங்களே வேண்டாம்' என்பதும் ' எல்லா மதங்களையும் ஒரே மதமாக்குவோம்' என்பதும் வேண்டாத வேலை. முடியாததும், குழப்பத்தை விளைவிப்பதும் ஆகும்.

'ஏன் பிறக்கிறோம்?
ஏன் சாகிறோம்?
எது நமது ஆரம்பம்?
எங்கே நமது முடிவு?
நம்மைச் சுற்றி இருப்பது என்ன? நமக்கும் நாமிருக்கும் இடத்திற்கும் என்ன தொடர்பு?
நோய், துன்பம், மரணம் இவைகளிலிருந்து நம்மால் மீளவே முடியாதா?' என்ற சிந்தனையிலிருந்து பிறந்தது தான் 'மதம்'. அந்த சிந்தனையின் தீர்மானமாக முடிந்ததுதான் கடவுள்.
சிறுதுளியான ஜீவன், எல்லாமான கடவுளை நோக்கி பயணம் செய்ய சரியாகப் போடப்பட்ட பாதையே மதம். சில பாதைகள் கடவுளிடம் முடியும், சில தொலைவிலேயே முடிந்து விடலாம். ஒரு பாதையிலே நடந்தவன் உண்மை நாட்டம் உடையவனானால் பக்குவப்பட பட சரியான பாதையை பிடித்து வந்து சேர்ந்து விடுவான்.
ஒரே ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள் அவரவர் இருக்கும் இடத்திலிருந்துதான் புறப்பட முடியும்.
ஆனால் இந்த 'யோக வழி'க்குள்ள சிறப்பு என்னவென்றால், இது எல்லா மதங்களும் கடைபிடிக்கக் கூடியது. யாவருக்கும் பொதுவானது.
யோகம் பழக யாரும் மதம் மாறத்தேவையில்லை.
எல்லா மதத்திலும் இருக்கும் சிறப்பான முறைகள் இதில் இருக்கின்றன. பொதுவாக, 'யோக'த்தை 'மதம்' எனச் சொல்லத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் யோகம் எந்த மதத்தினையும் சார்ந்ததோ அல்லது மதத்தின் கூறோ அல்ல.

ஷட் தரிசனங்கள்

ஆறு தரிசனங்கள் எனப்படும் அவையாவன:

நியாயம்,
வைசேஷிகம்,
சாங்க்யம்,
யோகம்,
பூர்வ மீமாம்சை,
உத்ரமீமாம்சை

என்பவை இந்தியாவில், பரத கண்டத்தில் வரிசைப்படி நிகழ்ந்த தத்துவ வளர்ச்சியைக் காட்டுவதாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுக்கொன்று ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்டுள்ளன.

சுவையான சம்பவங்கள்

ஒரு சமயம் பதஞ்சலி முனிவர் தமது ஆயிரம் மாணவர்களுக்கு 'வித்தை' சொல்லிக்கொண்டிருந்தார். மாணவர் ஆயிரம் பேர் என்பதால், தமது ஆயிரம் தலை அனந்தவடிவத்தோடு பாடம் சொன்னார். மூச்சுக் காற்றாலும், பார்வையாலும் மாணவர் மாண்டுவிடக்கூடாது என, நடுவில் ஓர் திரை இட்டுக்கொண்டார். யாரும் தம்மைத் திரையை விலக்கிப் பார்க்கக் கூடாது என்பதும், பாட நடுவில் சொல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்பதும், அவர் இட்ட நிபந்தனைகள். மந்தமான ஒரு மாணவர், பாடம் சலிப்பாக இருக்கவே எழுந்து யாருமறியாமல் வெளிச்சென்று விட்டார். ஆச்சரியமான முறையில் போதிக்கும் குருவைப் பார்க்கும் ஆவலில் ஒருவர் திரையை விலக்கினார்.
பதஞ்சலியின் பார்வை, மூச்சால் அங்கிருந்த அனைவரும் மாண்டு விட்டனர். அச்சமயம், வெளிச்சென்றிருந்தவர் உள்ளே வரவே, வித்தையைக் காக்க ஒருவராவது எஞ்சியிருக்கிறாரே என்று அவரிடம் தமது வித்தையை கொடுத்தபின், சொல்லாமல் வெளிச்சென்ற குற்றத்திற்காக அவரை பிரம்ம ராட்சஸாக சபித்தார்.
ஸ்ரீ இராமனுஜரின் வாழ்க்கையிலும் இதுபோலவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரும் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால்,
'திருமிடறு புழுத்தான்' என்று வரலாற்றில் அவப்பெயர் பெற்ற குலோத்துங்க சோழ மன்னன் ஆட்சியில் மேனாடு (மேல் நாடு) என்று வழங்கப் பெற்ற மைசூருக்கு வந்திருந்த இராமானுஜர், மன்னனின் மகளுக்குளிருந்த பேயை விரட்டினார். ஆகவே மகிழ்ந்த மன்னன் இராமனுஜரைப் பின்பற்ற முடிவு கொண்டான்.
அதுவரை அம்மன்னன் பின்பற்றி வந்த சமணர்கள் பன்னீராயிரவர் (12000 பேர்) சினமுற்று ஒரே சமயத்தில் இராமானுஜருடன் வாதத்திற்கு வந்தனர். அப்போது தம் முன்னால் ஒரு திரையை இட்டுக்கொண்டு அனைவருடனும் இராமானுஜர் ஏக காலத்தில் ஆதிசேஷனான தம் உருவத்தில் வாதிட்டு வென்றார்.

பதஞ்சலி-அறிமுகம்


யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்'. அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்:
வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும்,
யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர்.
இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்வர்.
தந்தை: அத்திரி முனிவர். தாய்: கோணிகா.
வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் 'ஆத்திரேயர்', கோணிகாவின் பிள்ளையென்பதால் 'கோணிகாபுத்திரர்'.
இவர் எழுதிய மூன்று நூல்கள்:
யோகத்தினை விளக்கும் 'யோக சாஸ்திரம்',
மொழி இலக்கணமான 'மஹாபாஷ்யம்',
ஆயுர் வேத்மாகிய 'சரகம்' என்ற 'ஆத்திரேய சம்ஹிதை'.
ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்.