சிவ திருத்தலங்களும் தோஷ பரிகாரங்களும்

1. திருக்கச்சி ஏகம்பம்
காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக பழைய கோவில் காசிக்கு சமமாக கருதப்படுகிறது. இத்தலத்திற்கு மாமரமே தலமரம். இம்மரத்திற்கு நான்கு கிளைகள் உண்டு. கீழே விழும் கனிகளும் நான்குவித சுவை உடையதாகச் சொல்லப்படுகிறது. இம்மரம் வேதத்தைக் குறிக்கும். கிளைகள் நான்கு பிரிவினை குறிக்கின்றன. இதன் வயது ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது. தவம் செய்த தேவிக்கு இங்கு தான் காட்சி கிடைக்கப் பெற்றதாக வரலாறு. எனவே இத்தலத்தில் இம்மரத்தின் அருகே உள்ள பிரகாரத்தில் கச்சி ஏகம்பனை நினைத்து மனஞபம் செய்தால் இப்பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு நன்மையை நல்குவார் என்பது வழக்கு.

2. மாகறல்
காஞ்சி – உத்திரமேரூர் பேருந்து சாலையில் உள்ளது. இத்தலம் முற்காலத்தில் அங்கபிரதட்சணம் செய்து குழந்தையில்லாதவர் குறை நீக்கப் பெற்று மகப்பேறு பெற்றனர் என்பது வரலாறு. திருமாறகலீசுவரர் இங்கு இறைவன். இவரை வணங்கி வழிபட்டால் மகப்பேறு பாக்கியம் நிச்சயம்.

3. திருவலிதாயம்
சென்னை ஆவடி சாலையில் உள்ள பாடி என்பதே திருவலிதாயம் ஆகும். இங்குள்ள வல்லீசுவரர் உடலில் நவகிரக குரு என்னும் தேவ குருவை ஏற்றுக் கொண்டவர். எனவே குரு கிரகத்தால் ஏற்படும் தீமைகள் குறைந்திடவும் குருவின் அனுக்கிரகம் கிட்டிடவும் இத்தலத்தின் இறைவனை வணங்கிடல் நலம்.

4. திருவான்மியூர்
சென்னையில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. உடல் சார்ந்த தொல்லைகள் தீர இங்கு எழுந்தருளியிருக்கும் திருமருந்தீசர் இறைவனை வணங்கி வழிபடுதல் நலம் பயக்கும்.

5. திருகாளத்தி
ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சென்னை காஞ்சியிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். திருகண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற தலம்.
இது முக்கியமாக இராகு, கேது தோச பரிகாரத்திற்கு உரிய தலமாகும். எனவே இராகு கால தரிசனமும் சாந்தியும் முக்கியம். கோயில் அமைப்பும் எதிர்வலம் கொண்டிருக்க இரகு கிரகத்திற்கு சிறந்த தலம் என்பது புலனாகும். மேலும் இங்கு எழுந்தருளியிருக்கும் திருக்காளத்திநாதர் பெற்ற கவசத்தில் நவக்கிரகங்கள் அங்கம் வகிக்கும் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கும் ஏற்ற தலமாகும்.
மற்றும் இங்கு வழிபாடு செய்வது மிக விசேஷமாகும். எனவே இராகு, கேது மூலம் திருமணத்தடைக்கு, உட்பட்டவர்களும், நாகதோஷம் கொண்டு புத்திர தோஷம் உள்ளவர்களும், ராகு திசை நடக்கும்போது ஏற்படும் தீமைகள் நீங்கவும், கோச்சாரத்தில் 8-ம் வீட்டில் இராகு சஞ்சரிக்க ஏற்படும் தீமைகள் நீங்கிடவும், மாங்கல்ய பலகீனம் உடைய பெண்களும் இங்கு வழிபடுதல் நலம்.

No comments: