உங்களைப்போல் தடுமாறிப் போகாமல் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? உங்கள் வாழ்க்கை- குழப்பத்தில், தடுமாற்றத்தில் இருக்கிறது என்ற உண்மை தெரிந்திருக்கிறதென்றால் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை, உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது. உங்கள் குழப்ப மனநிலையைக் கொண்டு அவர்கள் மனதில் எந்தப் பாதிப்பும் உருவாக்காதீர்கள். இதுதான் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல்படி.
மற்றவர்கள் அழுகிய மனங்களோடு உங்கள் குழந்தைக்குத் தொல்லை தரக்கூடும். அவர்களிடமிருந்து உங்கள் குழந்தையைத் தனிமைப்படுத்திவிட முடியாது. ஏனெனில், உலகமெங்கும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? குழந்தைக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும்? அறிவுக்கூர்மையோடும், விழிப்புணர்வோடும் இருக்க உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். வாழ்க்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை அறிவு எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. ஒரு எறும்பு பிறக்கிறது. எறும்பை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். இந்த எறும்புக்கு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான அனைத்து அறிவும் இருக்கிறது. நீங்கள் செய்வதை அதனால் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு எறும்ப்ய் என்ன செய்யவேண்டுமோ, அதற்குத் தேவையான அறிவு அதற்கு இருக்கிறது. இது ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும். ஆனால், என்ன சிக்கல் என்றால், உங்களைப் போன்ற அறிவோடு உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தக் குழந்தை தன் இயல்புக்கேற்றாற்போல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் புரிந்துகொண்ட விதத்திலேயே உங்கள் குழந்தையையும் அறிவைப் புரிந்து கொள்ளவேண்டும் என எண்ணுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குழந்தை ஒரு மருத்துவராக வேண்டும். ஆனால் அந்தக் குழந்தை அற்புதமான தச்சுப் பணியாளராக வரலாம். உங்கள் குழந்தை மருத்துவராக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த உலகிற்கு மருத்துவர் தேவை என்பதாலோ, மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பவர்மீது அக்கறை கொண்டோ இம்முடிவை நீங்கள் எடுக்கவில்லை. உங்களுக்கு ஒரு முட்டாள்தனமான கருத்து, சமூகத்தில் ஒரு மருத்துவரோ- இல்லை ஒரு பொறியாளரோ அல்லது வேறு ஏதோ ஒரு அபத்தமான பொறுப்போதான் உங்களுக்கு பெருமை என்று கருதுகிறீர்கள்.
இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால் உங்கள் வாழ்க்கை உங்களுக்கு நிறைவு தருவதாக இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையை உங்கள் குழந்தை மூலம் வாழ விரும்புகிறீர்கள். ‘என் குழந்தை ஒரு மருத்துவர்’ என்பது குழந்தையைக் கெடுப்பதற்கான வழி. எல்லாக் குழந்தைக்கும் போதிய அறிவு இருக்கிறது. தன்னுடைய அறிவுநிலைக்கு ஏற்ப அந்தக் குழந்தை வளர்வதற்குச் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, உங்கள் சிந்தனைகளை அக்குழந்தையின்மீது திணிப்பது ஆகாது. அந்தக் குழந்தைமேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதில் ஆசிரியருக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. நண்பர்களுக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் சில பங்குகள் இருக்கின்றன. இதை நீங்கள் முழுக்கத் தவிர்த்துவிட முடியாது. ஆனால் பெற்றோர் என்ற முறையில் ஒரு முக்கியப் பங்காற்றி குழந்தையின் இயல்பான அறிவுநிலை வளர நீங்கள் துணை செய்யலாம். முதலில் ஒரு குழந்தை பிறந்தாலே அதற்குப் போதனை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறீர்கள். பிறகு அந்தக் குழந்தியை நீங்கள் கெடுத்து விடுவீர்கள். ஒரு குழந்தை பிறக்கிறதென்றால் நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக அர்த்தம்; உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இழந்திருக்கிறீர்கள். எவ்வளவோ கோணல்கள் ஏற்பட்டுவிட்டன.
குழந்தை வாழ்க்கையை முற்றிலும் புதிதாகப் பார்க்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையோடு புதிதாக உங்கள் வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உங்கள் அழுகிய சிந்தனையும் தலைகாட்டும். அதையும் தாண்டி அக்குழந்தையின் அறிவு தானாக வளரும். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தரக்கூடியது அன்பும், ஆதரவும்தான். அது போதும். அன்புமயமான ஒரு சூழல் ஏற்படுத்தினால் அக்குழந்தையின் அறிவு இயல்பாகவே மலரும். இதைத்தான் உங்களால் செய்ய முடியும். நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்தீர்களோ அதையே உங்கள் குழந்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நினைத்தும் பார்க்காத ஒன்றை உங்கள் குழந்தை செய்யலாம் இல்லையா? நீங்கள் ஒன்றைப் பற்றி யோசிக்கக்கூட அஞ்சியதை, உங்களுக்கு வரவே வராத எண்ணத்தை குழந்தை இயல்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த உலகத்தில் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் எண்ணிக்கை ஏராளம்.
இந்த நாட்டின் மக்கள் தொகையைப் பார்த்தால் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே ஒரு குற்றம். இந்த மக்கள்தொகை பெருக்கத்தை நீங்கள் அன்பு காரணமாகச் செய்யவில்லை. செய்வதற்கு வேறு ஏதும் பணி இல்லை. ஆகவே செய்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் வேறு ஏதேனும் மதிப்புடியதாகச் செய்வதற்கில்லை. எனவே நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டே போகிறீர்கள். இது அன்பின் காரணமாக அல்ல. ஒன்று பாதுகாப்பின்மையினால் அல்லது வேறு பணி இல்லாததால். பெரும்பாலும் பாதுகாப்பு உணர்வு இல்லாததால் தான், இல்லையா?
இன்னும் சிலபேர் செய்கிற தவறான விஷயம் என்னவென்றால் குழந்தையை அன்பாக வளர்ப்பதென்றால் அது கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது என்று நினைக்கிறீர்கள். இது முட்டாள்தனம். முதலில் உங்கள் குழந்தையையே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பதில்லை. உங்கள் குழந்தையைப் போதிய அறிவோடு நீங்கள் பார்ப்பீர்களேயானால், அந்தக் குழந்தை கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது முட்டாள்தனம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு அன்பு என்று பெயர் சுமத்துகிறீர்கள். குழந்தையை எப்படி நீங்கள் வளர்க்க வேண்டுமென்றால் அதைக் காட்டில் விட்டாலும், சமூகத்தில் விட்டாலும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்படித்தான் வளர்க்க வேண்டும். குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் பதட்டமும், கோபமும், அச்சமும், பொறாமையும் அரங்கேறிக் கொண்டே இருக்குமானால் இவற்றைத்தான் அது பழகும். இதற்குத்தான் வீட்டில் செய்முறைப் பயிற்சி குழந்தைக்குக் கிடைக்கிறது. எனவே நல்ல முறையில் குழந்தையை வளர்க்க வேண்டுமானால், நீங்கள் முதலில் உங்கள் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். அன்புமயமான- ஆனந்தமான- அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்பவராக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களையே நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், மிகவும் சக்திவாய்ந்த உங்கள் குழ்ந்தையை என்ன செய்ய முடியும்? உங்கள் பதட்டங்கள், உங்கள் கோபங்கள் போன்ற அபத்தமான குணங்கள் உங்கள் குழந்தைக்கும் வரும். குழந்தைமீது உள்ளபடியே அக்கறை இருக்குமானால். நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எனவே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பே இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கின்ற தகுதி உங்களுக்கு இருக்கிறதா, இல்லையா என்று யோசியுங்கள். யோசிக்கும்போது உங்கள் வாழ்க்கைக்குக் குழந்தை அவசியமா, இல்லையா என்றும் யோசியுங்கள்.
No comments:
Post a Comment