உனக்குள் இருக்கிறது உன்னதம்-9
கடவுள் சிலை என்பது, கடவுளின் உருவம் என்று நினைத்து சிலர் உருவாக்கியிருக்கிற வடிவம். உங்கள் குழந்தையைப் பாருங்கள். அது கைக் குழந்தையாக இருக்கிறபோது தன் தாயுடன் தூங்குகிறது. தாயின் அரவணைப்பின் வசதி அதற்குத் தெரியும். குழந்தை வளர்ந்த பிறகு அதைத் தனியாகப் படுக்க வைப்பதுதான் அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியம். திடீரென்று தனியாகப் படுக்க வைத்தால் அதற்குச் சிரமம். என்ன செய்வீர்கள்? வழக்கமாக ஒரு பொம்மை கொடுப்பீர்கள் – அதைப் பிடித்துக்கொண்டு தூங்குவதற்காக. இப்போதெல்லாம் பார்பி அல்லது மிக்கி மௌஸ் போன்ற பொம்மைகள் தரப்படுகின்றன.

இந்த பொம்மைகளைக் கட்டி அணைத்துக் கொண்டு தூங்குவது குழந்தைக்கு வசதியாக இருக்கிறது. குழந்தை வளர்கிறபோது பொம்மையை வீசிவிடும்படி நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒருகாலத்தில் நீங்கள் பாதுகாத்த பொம்மையை அதுவே குப்பைத் தொட்டியில் வீசிவிடுகிறது. இதை நீங்கள் சொல்ல வேண்டியதுகூட இல்லை. குழந்தை வளர வளர அதன் வாழ்விலிருந்து பொம்மை அகன்று விடுகிறது. ஆனால் குழந்தைக்குப் பொம்மை தேவைப்பட்டு நீங்கள் அதைப் பிடுங்கிக் கொண்டால் அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும்; குழந்தையின் மனநிலையைப் பாதிக்கும். அதுபோல இப்போது உங்களுக்கு ஒரு உருவம் தேவைப்படுகிறது. நீங்கள் பற்றிக்கொண்டு நடக்க ஒரு கரம் வேண்டும் என்று தெரிந்திருந்தால் வேறு ஏதும் தேவையில்லை. ஆனால் ‘இதுதான் கடவுள்’ என்று முடிவு செய்துவிட்டால், அதற்குப் பிறகு சிரமம் தான். கடவுளோடு தொடர்பு படுத்த உங்களுக்கு ஒரு உருவம் தேவைப்படுகிறது. அதை உருவாக்குகிறீர்கள். தேவைப்படும்வரை அதைப் பயன்படுத்துங்கள். ஆனால் அதைத் தாண்டி வளர்ந்துவிட்டால் வெளியே வந்துவிடுங்கள்.

இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் கோவில்கள் வழிபாட்டுக்காக உருவானவை அல்ல. சில காலமாகத்தான் அப்படி ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. கோவில் கட்டுவதே ஆழமான ஒரு விஞ்ஞானம். அதிலிருக்கிற விக்கிரகம், பிரகாரம், கர்ப்பக்கிருகம் எல்லாமே சரியாகக் கட்டப்பட்டிருந்தால் அதுவே ஒரு பெரிய சக்திமிக்க இடம். அடிப்படையில் சில விஷயங்கள் உள்ளன. விக்கிரகத்தின் அளவ்ர், விக்கிரகத்தின் வடிவம், விக்கிரகம் வைத்திருக்கும் முத்திரை, அதன் பிரதிஷ்டைக்கு பயன்படுத்துகின்ற மந்திரம், இவை எல்லாம் சரியாக அமையுமேயானால் அது சக்திமிக்க இடமாகிவிடும். இந்த முறையில் கோவில் நல்ல அதிர்வலைகளோடு உருவாக்கப்பட்டிருக்கும். நல்ல அதிர்வலைக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி கோவில் என்று சொல்கிறபோது புராதனக் கோவில்களைச் சொல்கிறேன். நவீன காலத்தில் கட்டப்படுகிற கோவில்கள் வணிக மையம் போல் கட்டப்படுகின்றன. ஏறக்குறைய நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது. வணிக மையம் பிற தேவைகளை நிறைவு செய்வதைப் போல கடவுள்களை வைத்துக் கொண்டு கோவில்களும் அதனைச் செய்கின்றன.

புராதனமான கோவில்கள் ஆன்மிக விஞ்ஞான அடிப்படையில் உருவானவை. உங்கள் பாரம்பரியத்தில் கோவில்களுக்குப் போனால் நீங்கள் கும்பிட வேண்டாம். பூசாரிக்குப் பணம் தர வேண்டாம். எதையாவது கேட்க வேண்டும் என்றெல்லாம் யாருமே சொல்லித் தரவில்லை. இவையெல்லாம் பாரம்பரியத்தின் ஒரு பகுதியல்ல. இவை இப்போது நீங்கள் தொடங்கியிருப்பது. உங்களைக் கோவிலுக்குச் சென்று அமைதியாக அமர்ந்து எழுந்து வரச் சொன்னார்கள். அதுதான் பாரம்பரியம். சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் போகிறீர்கள், உட்காருவதுபோல பாவனை செய்துவிட்டு உடனே எழுந்து வந்து விடுகிறீர்கள். இதுவல்ல ஆலயம் சென்று வரும் முறை. நீங்கள் அங்கே ஏன் அமரவேண்டும் என்றால், அங்கே ஒரு நல்ல சக்தி இருக்கிறது. காலையில் உங்கள் உலகியல் வாழ்க்கைக்குள் நுழையும் முன் கோவிலுக்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்துவிட்டுப் போகும் முறை இருந்தது. இது நேர்மறை அதிர்வுகள் மூலம் உங்களை மறுசீரமைத்துக் கொள்கிற முறை. ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தோடு உலக வாழ்க்கைக்குள் போவீர்கள். ஆன்மிகப் பாதையில் யார் இல்லையோ, அவர்களுக்குத்தான் பழங்காலத்தில் கோவில்கள் தேவைப்பட்டன.

ஒரு மனிதர் தனக்கென்று சில ஆன்மிகப் பாதைகளைத் தொடங்கிவிட்டால், தினமும் கோவிலுக்குப் போக வேண்டியதில்லையென்று பாரம்பரியத்தில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், கோவில்கள் என்பவை பேட்டரியை சார்ஜ் செய்கிற இடம் போல. உங்களை நீங்களே சார்ஜ் செய்து கொள்கிற ஒரு முறையிருந்தால், கோவிலுக்குப் போக வேண்டியதில்லை. இது கடவுளின் இருப்பிடமாகவோ, பிரார்த்தனை செய்கிற இடமாகவோ இல்லை. முன்பெல்லாம் பிரார்த்தனை அனுமதிக்கப் பட்டதுகூட இல்லை. பலர் பயன்படுத்தும் வண்ணம் சக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. அப்போதெல்லாம் கோவில் கட்ட எல்லோரும் பணம் கொடுத்தார்கள். ஏனெனில், எல்லோரும் கோவிலைப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று. ஆனால் உங்களுக்குத் தகவல் அனுப்புவதற்கான இடமாகக் கோவில் இருந்ததில்லை. உங்கள் பேராசையை நிறைவு செய்து கொள்வதற்கான் இடமாகவும் கோவில்கள் இருந்ததில்லை. இப்போதெல்லாம் கோவில்கள் அப்படிப் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

No comments: