பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-6

ஜட உலகம் அழிவுக்குட்பட்ட இயற்கையை உடையது. பௌதிக ஆன்மிக உலகங்கள் மோதலால் பெரு நாசம் உண்டாகும் என்ற பௌதிக விஞ்ஞானிகளின் கூற்றில் சிறிது உண்மை இருக்கின்றது. பௌதிக உலகானது இயற்கை நிலைகளால் உண்டாக்கப்படுவதாக இருக்கின்றது. இந்த நிலைகள் ஸத்வம் (நற்குணம்), ரஜஸ் (தீவிரம்), தபஸ் (அறியாமை) என்பனவாம். இந்த ஜட உலகம் தீவிர குணத்தால் படைக்கப்பட்டு, நற்குணத்தால் காக்கப்பட்டு, அறியாமையால் அழிக்கப்படுகின்றது. இக்குணங்கள் சர்வமயமாயிருப்பதனால், ஒவ்வொரு கணமும், நிமிடமும், மணிநேரமும், ஆக்கலும் காத்தலும், அழித்தலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

இவ்வுலகின் மிக உயர் கிரகமான பிரம்ம லோகமும் இவ்வியற்கை நிலைக்குட்பட்டதேயாம்.

நற்குணத்தின் ஆதிக்கத்தால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கு இங்கு வாழ்நாள் நீடிக்கிறது. இந்த நீண்ட வாழ்நாளைக் கொண்டபோதும் இவ்வுலகம் அழிவுக்குட்பட்டதேயாம். பௌதிக உலகில், பூமியில் வாழும் நாட்களுடன் ஒப்பிடுகையில் வினோதமாகப் பெருகிய காலத்தைக் கொண்ட வாழ்நாள் இருப்பினும் பிரம்ம லோகத்து வாழ்வு, ஆன்மிக உலக வாழ்வின் ஒரு துளிபோன்றதேயாம்.

பௌதிக உலகின் அழிவு இருவிதமாய் உண்டாகிறது. 43,00,000 x 1000 சூரிய வருடங்களுக்கொரு முறை, பிரம்மலோகத்தின் ஒவ்வொரு தினத்தின் முடிவுலும், பகுதிப்பிரளயம் ஏற்படுகின்றது. இப்பிரளயத்தின் போது உயர்க்கிரகங்களான பிரம்மலோகம் போன்றவை அழிவுறுவதில்லை. ஆனால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கொரு முறை முழுப்பிரளயம் ஏற்படும் போது, பிரபஞ்சம் முழுவதுமே, பௌதிக மூலாதார தத்துவங்கள் உருவாகும் ஆன்மிகப் பெருவுடலோடு ஒன்றிவிடுகின்றது. எனினும் ஜடவெளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஆன்மிக உலகு அழிவுறுவதில்லை. அது பௌதிக உலகங்களை தன் வயப்படுத்திக்கொள்கின்றது. இவ்வுண்மையை ஆன்மிக த்த்துவத்தின் நிர்ணயங்களை உணர்ந்தறிந்த முக்தர்களின் இழுக்கற்ற ஆதாரத்திலிருந்தே அறியமுடியும்.

இவ்விதமாக வேத ஞானமானது ஜடவுலகின் முதல் உயிர்வாழியான பிரம்மாவின் இதயத்தில் அறிவுறுத்தப்பட்டது. நாரதருக்கு இந்த ஞானம் பிரம்மாவால் வழங்கப்பட்டது. இதுபோன்றே பகவத் கீதையின் ஞானம் விவஸ்வான் எனும் சூரியதேவதைக்கு ஸ்ரீகிருஷ்ணனால் வழங்கப்பட்டது. இந்த சீடப்பரம்பரையின் தொடர்பு விட்டுபோனபோது மீண்டும் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது.

ஆன்மிக உலகின் விவரங்களை அறியுமுன்பு ஒருவன் தனது இதயத்தையும், பழக்கவழக்கங்களையும் முழுமையாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளல் அவசியம். பக்குவப்பட்ட யோகியும், புதிய பயிற்சியாளனும் பழகும்படியாக 'பக்தியோகம்' உன்னதமான தெளிவான விஞ்ஞன வழியாக விளங்குகின்றது.

பரமபுருஷனான பகவான், வேறெந்த பலனுமின்றி ஒருவனால் சேவை செய்யப்படுகையில் பௌதிக உலகின் விஷயங்கள் தாமாகவே ஒளியூட்டப்படுவதோடு உலகாயதமான விதத்தில் செயலாற்றாமலே பக்தனின் உள்ளம் வளம்பெறுகின்றது. இதுவே பகவத் கீதையின் ரகசியமாகும். இது அனைத்து உயிர்வர்க்கங்களுக்கும் பொருந்தும்.

புற உலகு புகும் வழி
ஆன்மிக உலகங்களிற் புகுவது, ஜட உபகரணங்கள் மூலமாக அல்லாமல் வேறுபட்டதாக இருக்கின்றது. இவ்வுலகில் வாழும்போதே ஆன்மிக சேவைகளிலீடுபட்டு உயிர்கள் புற உலகு புகும் பேறு பெறலாம்.
ஆனால் உலகாயதவாதிகள் சோதனை செய்தறியும் அறிவில் முழு நம்பிக்கை கொண்டவரும் பழுத்த பௌதிக வாதிகளுமானவர் ஆன்மிக புற உலகு புக மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் விண்கலங்கள் பௌதிக உலகின் வேறு கிரகங்களையே அணுக இயலாதவைகளாக இருக்கையில், பௌதிக அண்டங்களுக்கப்பால் வெகு தொலைவில் உள்ள சேதனப் புறவெளியை அடைய இயலாததாகும். பௌதிக உடலைக்கட்டுப்படுத்த இயன்ற யோகிகளுக்கு கூட இந்தப்பிரதேசம் புகமுடியாததாகும்.

ஆன்மிக சேதனத்தை கட்டுப்படுத்தி இயக்கி, ஒரு குறிப்பிட்ட சமயத்தில் தன்னிச்சையாக உடலைவிட்டுப் போகும் சித்தர்கள், பௌதிக ஆன்மிக உலகுகளை இணைக்கும் ஒரு தனிப்பாதை வழியாக ஆன்மிக உடலை அடைய முடியும். இப்படி முயலுபவர்கள் கூட கீதையில் குறிப்பிடப்பட்ட முறையை பின்பற்றுகின்றனர்.

"உன்னதத்தை உணர்ந்து கொண்டவர்கள், உத்தராயணம் எனும் சூரியன் தனது வடதிசைக் கதியிற் செல்லும் காலத்தில் நெருப்பு, ஒளி இவற்றின் அதிதேவதைகளால் வாயுமண்டலம் ஆதிக்கப்படுத்தப்பட்ட சுபநேரத்தில் உடலை நீத்து, ஆன்மிக உலகை அடைய இயலும்."

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

No comments: